பரியேறும் பெருமாள் படத்தின் கருப்பு டீ கதாநாயகனை உணர்த்துகிறது. அதாவது அவன் சார்ந்திருக்கிற தாழ்த்தப்பட்ட சாதி வகுப்பினை குறிப்பிட்டு காட்டுகிறது. கலர் டீ கதாநாயகியை உணர்த்துகிறது. அதாவது அவள் சார்ந்திருக்கும் பிற்படுத்தப்பட்ட சாதி வகுப்பினை குறிப்பிட்டு காட்டுகிறது.
கருப்பு டீ என்பது பால் கலக்காத வெண்ணீருடன் டிக்காஷன் மட்டும் கலந்த டீ. கலர் டீ என்பது பால் கலந்த டீ என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
பால் கலந்த கலர் டீ தன்னை உயர்வாக எண்ணிக் கொண்டுள்ளது. தானும் ஒரு காலத்தில் கருப்புதான் என்ற உண்மையை மறந்து விட்டது. பாலைக கலக்க கருப்பு டீ அனுமதித்ததால் தான் அது கலர் டீயாகவே உயர்ந்தது.
இங்கு பால் என்று பொறுப்படுவது பணம், பொருள், கல்வி, அறிவு, திறமை, வீரம், இது போல் எதுவாக வேண்டுமானாலும் பொருள் படும். இப்படி ஏதோ ஒன்றுடன் தன்னையும் இணைத்துக் கொண்டு தான், தன் நிறத்தை மாற்றிக் கொண்டுள்ளதால் தான் அது கருப்பு டீயைப் பார்த்து உன்னை போலவே நான் என்று நினைத்துவிடாதே, நான் வேறு .உன்னைவிட உயர்ந்தவன் என தன்னை தானே மெச்சிக்கொல்லிறது.
படத்தின் முடிவில் கருப்பு மற்றும் பால் இரண்டு டீயும் அருகருகே உள்ளது. கலர் டீ, தான் கலர் டீயாக உரு மாறிய கதையினை மறந்து பெருமைப்பட்டுக் கொள்கிறது. கலர் டீயின் ரகசியம் கருப்பு டீக்கு தெரியாமலே இருந்தது. ஏனென்றால் கலர் டீயின் அருகிலே போக முடியாத சூழ்நிலை இருந்து வந்தது. இப்போது பக்கத்தில் சரி சமமாக நின்று பார்க்கும் நிலை உருவாகியுள்ளது.
அது புரிந்துகொண்டது. அனாவசியமாக தற்பெருமை பேசிக்கொள்ளும் கலர் டீயிடம் சண்டையிட வேண்டிய அவசியமில்லை. கருப்பு டீயும் கலர்ஃபுல் டீ ஆக மாற வேண்டும் என்று முடிவெடுத்து விட்டது. கொஞ்சம் பாலை மட்டும் சேர்த்துக்கொண்டதற்கே இந்த ஆட்டம். நாம் பாலை மட்டும் அல்ல, சுக்கு, இஞ்சி, மல்லி, ஏலக்காய் என்று எதையெல்லாம் சேர்த்துக்கொள்ள முடியுமோ அதையெல்லாம் சேர்த்து நாமும் ஒரு புதிய அழகான கலர்ஃபுல் டீயாக மாறுவோம் என்ற முடிவெடுத்துள்ளது.
கலர்புல் டீ வந்தால் நல்லதுதான் என்றாலும் கூட அது கலர் டீயை பார்த்து ஏளனம் செய்ய ஆரம்பித்து விடக்கூடாது. கலர் டீ செய்து கொண்டுள்ள அதே தவறினை கலர்புல் டீயும் செய்துவிடக்கூடாது . பிறகு மீண்டும் போராட்டம் தான் எழும். இப்படியே போனால் டீ என்ற ஒன்று இல்லாமலே போய்விடும்.
கருப்பு டீ தான் பின்னாளில் கலர் டீ மற்றும் கலர்ஃபுல் டீ என மாறும். ஆனால் தன் நிலையினை மாற்றிக் கொள்ள எதை வேண்டுமானாலும் தன்னோடு சேர்த்துக் கொள்ளலாம். தேயிலையானது தண்ணீரோடு சேரும்போது இயல்பாக மாறுவது போல் அது இருக்கவேண்டும். அவ்வளவுதான்
கருப்பு டீ ( கதையின் நாயகன்) கலர் டீயை ( கதையின் நாயகியை) காதலிக்க வேண்டுமென்றோ அல்லது கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமென்றோ நினைக்கவில்லை. அப்படி இணைந்த கலப்பட டீக்களையும் பார்த்தாகிவிட்டது. மாற்றம் முக்கியம்தான் டீயில் நிறம், மணம், சுவை இருக்க வேண்டுமல்லவா. அதுதான் உண்மை. அதுதான் தேவையும் கூட என முடிவெடுத்து கருப்பு டீ அதனை நோக்கி பயணிக்க ஆரம்பித்து விட்டது என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இப்படி ஒரு அருமையான படத்தை, காட்சியை எடுத்த இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களை வார்த்தையால் பாராட்டவே முடியாது.