Contents
ஜகமே தந்திரம்
ஜகமே தந்திரம், மதுரையில் உள்ள ஒரு பரோட்டா கடையில் வேலை பார்த்து வருகிறார் நடிகர் தனுஷ். இவர் மதுரையில் கொலை, கட்டப்பஞ்சாயத்து என சின்ன சின்ன ரவுடிசமும் செய்து வருபவர். இதே நேரம் லண்டனில் ஜேம்ஸ் காஸ்மோ மற்றும் ஜோஜு ஜார்ஜ் என்ற இரண்டு மாபியா கும்பல் சண்டை போட்டு வருகின்றன.

அதிகப்பணம் கிடைக்கும் என்பதனால் ஜோஜு ஜார்ஜை அழிக்க, ஜேம்ஸ் காஸ்மோ கும்பலிடம் இணைந்து வேலை பார்க்க மதுரையில் இருந்து லண்டன் செல்கிறார் நடிகர் தனுஷ். அங்கு ஜோஜு ஜார்ஜிடமும் மறைமுகமாக டீல் பேசி வரும் நடிகர் தனுஷ், ஒரு சமயத்தில் அவருக்கே துரோகம் செய்து அவரை கொள்வதற்கும் காரணமாகிறார் தனுஷ்.
அதன் பிறகு லண்டனிலே லிட்டில் மதுரை என்று உருவாக்கி சிறிதாக பரோட்டா கடை வைத்து ஐஸ்வர்யா லட்சுமியை காதலித்து சந்தோசமாக வாழ்ந்து வருகிறார் நடிகர் தனுஷ். இந்த சமயத்தில் கொல்லப்பட்ட ஜோஜு ஜார்ஜின் ஆட்களான நடிகர் கலையரசன் மற்றும் சிலர் தனுஷை துப்பாக்கியால் சுட்டு விடுகின்றனர்.
தனுஷ் சுடப்பட்டதற்கு காரணமாக ஐஸ்வர்யா லட்சுமி உள்ளார். இறுதியில் தனுஷ் உயிர் பிழைத்தாரா இல்லையா? ஐஸ்வர்யா லட்சுமி தனுஷுக்கு எதிராக செயல்பட காரணம் என்ன? என்பதே இந்த படத்தின் மீதிக்கதை.
படத்தில் சுருளி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் தனுஷ், தனக்கே உரிய நக்கல் மற்றும் நையாண்டி என்று நடிப்பில் மிகவும் பளிச்சிடுகிறார். இவருடைய அலட்டல் இல்லாத நடிப்பு படத்திற்கே பெரிய பலமாக அமைந்திருக்கிறது. பல காட்சிகளை சாதாரணமாக நடித்து அதிக ஸ்கோர் செய்திருக்கிறார் தனுஷ். தனுஷின் உடல் மொழி, வசனம் பேசும் ஸ்டைல் ஆகியவை மிகவும் ரசிக்க வைத்துள்ளது.
நாயகியாக நடித்துள்ள ஐஸ்வர்யா லட்சுமிக்கு, நடிப்பதற்கான அதிக வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அவரும் அதைப் புரிந்துகொண்டு சிறப்பாகவே நடித்துள்ளார். பிளாஷ்பேக் சொல்லும் காட்சியில் பார்ப்பவர்களை பரிதாபப்பட வைத்திருக்கிறார் இயக்குனர்.
பீட்டர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜேம்ஸ் காஸ்மோ, சிவதாஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜோஜு ஜார்ஜ் ஆகியோர் கதைக்கு சிறந்த தேர்வு என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. சிவதாஸ் அடியாளாக வரும் கலையரசன் மற்றும் தனுஷின் நண்பராக வரும் சௌந்தர ராஜா, சரத் ரவி ஆகியோர் கொடுத்த வேலையை மிக சிறப்பாக செய்து கவனிக்க வைத்திருக்கிறார்கள். நடிகர் தனுஷின் அம்மாவாக வரும் வடிவுக்கரசி அனுபவ நடிப்பை கொடுத்திருக்கிறார்.
கேங்ஸ்டர் கதைக்களத்தை மையமாக வைத்து அதில் ஈழத்தமிழர்கள், அரசியல் மற்றும் காதல் என படத்தையே சுவாரஸ்யமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் மேலும் கதாபாத்திரங்களை சிறப்பாக கையாண்டிருக்கிறார். சிவதாஸ் கதாபாத்திரத்திற்கு இன்னும் கூட கொஞ்சம் காட்சிகளை சேர்த்திருக்கலாம்.
படத்திற்கு பெரிய பலமே சந்தோஷ் நாராயணனின் இசை தான். பல காட்சிகளை இவருடைய இசை தாங்கிப் பிடித்து உள்ளது என்று தான் கூற வேண்டும். குறிப்பாக தனுஷ் துப்பாக்கி எடுத்து வரும் காட்சிகளில் பின்னணி இசை அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கிறது. ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் கேமரா, மதுரை மண்ணின் அழகையும், லண்டன் அழகையும் மாறாமல் படம் பிடித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தத்தில் ‘ஜகமே தந்திரம்’ ஜகஜால கில்லாடி.
Spread the love