Master Tamil Movie Review – மாஸ்டர்

Master

மாஸ்டர்

மது பழக்கத்திற்கு அடிமையாக இருக்கும் இளம் பேராசிரியரான தளபதி விஜய், ஒரு கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றுகிறார். அங்கு ஏற்படும் ஒரு பிரச்சினையினால் அவர் கல்லூரியில் இருந்து வெளியேறுகிறார். பின்னர் சிறுவர் சீர்திருத்த பள்ளி ஒன்றில் அவர் வாத்தியாராக நியமிக்கப்படுகிறார்.
அந்தப் பள்ளியினை விஜய்சேதுபதி தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். அங்கு இருக்கும் சிறுவர்களை, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தனது சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தி வருகிறார். இதனால் விஜய்க்கும், விஜய்சேதுபதிக்கு இடையில் மோதல் ஏற்படுகிறது. அத்துமீறும் விஜய் சேதுபதியை விஜய் எப்படி தடுக்கிறார் என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
நடிகர் விஜய் இந்த படத்தில் ஜே.டி. எனும் வாத்தியாராக நடித்திருக்கிறார். மாஸான வாத்தியாக வந்து ஒவ்வொரு காட்சியிலும் ஸ்கோர் செய்து ரசிகர்களின் மனதை கொள்ளைகொள்கிறார். மற்ற படத்தில் பார்த்த விஜய் போல் இல்லாமல் மாஸ்டர் படத்தில் புதுவிதமாக தெரிகிறார். வாத்தி கம்மிங் பாடலில் விஜய்யின் நடனம் வேற லெவல் என்று தான் சொல்ல வேண்டும்.
கதையின் நாயகி மாளவிகா மோகனன், அழகு, பதுமையுடன் அலட்டல் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
பவானியாக வரும் நடிகர் விஜய் சேதுபதி. மிகவும் கொடூர வில்லனாக வந்து மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். படத்தில் தளபதி விஜய்க்கு இணையாக இவருக்கும் காட்சிகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இவருக்கு பக்கபலமாக இருக்கும் அர்ஜுன் தாஸின் நடிப்பும் மிக அற்புதம்.
மேலும் இளம் நடிகர்கள் மகேந்திரன், சாந்தனு, கவுரி கிஷான், தீனா, ஆண்ட்ரியா, விஜே ரம்யா ஆகியோர் சிறிது நேரமே வந்தாலும் கூட, அவர்கள் வரும் காட்சிகள் அனைவராலும் ரசிக்கும்படியாக உள்ளன.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ், விஜய், விஜய் சேதுபதி என இரண்டு மாஸ் ஹீரோக்களை வைத்து படத்தை திறம்பட கையாண்டுள்ளார் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. விஜய்க்கு இணையாக விஜய் சேதுபதிக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ள விதம் தான் சிறப்பு. விஜய் ரசிகர்களுக்கான சில காட்சிகளை அமைத்திருந்தாலும், பெரும்பாலும் தனது ஸ்டைலில் தான் படத்தை நகர்த்தி இருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
இசை மற்றும் ஒளிப்பதிவு படத்தின் மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அனிருத்தின் இசையில் ஏற்கனவே பாடல்கள் வெளியாகி ஹிட்டான நிலையில், அதை காட்சிப்படுத்தியுள்ள விதம் மிகவும் பிரமாதம். அனிருத்தின் பின்னணி இசை படத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
அதேபோல் சத்யன் சூரியனின் ஒளிப்பதிவில், ஒவ்வொரு காட்சிகளும் கண்களுக்கு விருந்தாக அமைகிறது. குறிப்பாக ஸ்டண்ட் காட்சிகளில் இவரின் ஒளிப்பதிவு மிகவும் அட்டகாசம் செய்துள்ளது. படத்தின் ஸ்டண்ட் காட்சிகள் அனைத்தும் மாஸாக எடுத்துள்ளார்கள். மெட்ரோ சீன் ஆகட்டும், விஜய், விஜய் சேதுபதி மோதும் காட்சி ஆகட்டும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை என்று தான் கூற வேண்டும்.
மொத்தத்தில் ‘மாஸ்டர்’ சூப்பர் மாஸ்.
நடிகர்கள்:     விஜய், விஜய் சேதுபதி
நடிகை     :     மாளவிகா மோகனன்
இயக்குனர் :  லோகேஷ் கனகராஜ்
இசையமைப்பாளர்: அனிருத்
ஒளிப்பதிவாளர்: சத்யன் சூரியன்

Related posts