புத்தம் புது காலை திரைப்பட விமர்சனம் – PUTHAM PUDHU KAALAI TAMIL MOVIE REVIEW

PUTHAM PUDHU KAALAI

PUTHAM PUDHU KAALAI TAMIL MOVIE REVIEW 

 

PUTHAM PUDHU KAALAI படத்தில் ஐந்து கதைகள்மற்றும் ஐந்து இயக்குநர்கள் என தமிழுக்கு புத்தம் புதிதாக OTT தலமான அமேசான்ல் நேரடியாக ரிலீஸாக வந்திருக்கிறது இந்த புத்தம் புது காலை திரைப்படம். முன்னணி மற்றும் மாபெரும் வெற்றிகளை குவித்த இயக்குநரஹலான சுதா கொங்கரா, கௌதம் மேனன், சுஹாசினி மணிரத்னம், ராஜிவ் மேனன் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் இயக்கத்தில் உருவாக்கப்பட்டிருக்கும்  இந்த திரைப்படத்தில் ஜெயராம், ஊர்வசி, காளிதாஸ், கல்யாணி, எம்.எஸ்.பாஸ்கர், ரிது வர்மா, சுஹாசினி, அனு ஹாசன், காத்தாடி ராமமூர்த்தி, குருச்சரண், ஆண்ட்ரியா, லீலா சாம்சன், பாபி சிம்ஹா உள்ளடக்கிய பல்வேறு பிரபல நடத்திரங்கள் நடித்துள்ளனர். கொரொனா வைரஸ் ஊரடங்கினை அறிவித்தபோது நடைபெறும் உணர்ச்சிகரமான கதைகளாக இவை உருவாக்கப்பட்டுள்ளது. 

இளமை இதோ இதோ

முதலில் Soorarai Pottru என்ற மிகவும் எதிர்பார்ப்பிக்குள்ளான படத்தினை இயக்கியிருக்கும் சுதா கொங்கராவின் இளமை இதோ இதோ. துரோகி, இறுதிச்சுற்று மற்றும் சூரரைப் போற்று என ராவான படம் எடுக்கும் சுதா கொங்கராவா இப்படி ஒரு அருமையான பக்கா காதல் கதையை இயக்கியது என அனைவரும் ஆச்சர்யப்படும் வகையில் இளமையும், காதலும் ததும்ப ஒரு காதல் கதையினையே நமக்கு கொடுத்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். காளிதாஸ் மற்றும் கல்யாணி ஆகிய இருவரின் ஜோடி, பார்க்கும்போதே  அவ்வளவு புதிதாக இளமையாக இருக்கிறது. அவர்களின் கெமிஸ்ட்ரியை மிஞ்சி தூக்கி சாப்பிடும் அளவுக்கு ஜெயராம் மற்றும் ஊர்வசியின் முதிர் காதல் கதை அமைந்திருப்பது இன்னுமொரு சிறப்பு என்று தான் சொல்ல வேண்டும். கொஞ்சம் நகைச்சுவை மற்றும் கொஞ்சம் ரொமான்ஸ் என்று, ஒரு  புத்தம் புது ஸ்டார்ட்டை கொடுத்திருக்கிறது இந்த இளமை இதோ இதோ. 

அவரும் நானும் – அவளும் நானும்

காதல் கதைகளுக்கு பெயர்போன நம் கௌதம் மேனன் இயக்கியுள்ள அவரும் நானும் – அவளும் நானும். நியூக்ளியர் விஞ்ஞானி தாத்தாவாக நடித்துள்ளார் எம்.எஸ்.பாஸ்கர் – ஐ.டி வேலை பார்க்கும் பேத்தியாக ரிது வர்மா நடித்துள்ளார். இரண்டே பேரை வைத்து கொண்டு, தனது ஸ்டைலில் அழுத்தமான ஒரு எமோஷனல் கதையை சொல்ல முயற்சித்துள்ளார் கௌதம் வாசுதேவ் மேனன். இந்த கதையின் மிகப்பெரிய பலமே எம்.எஸ்.பாஸ்கரும், ரிது வர்மாவும் தான். அதுவும் உணர்ச்சிகரமான காட்சிகளை, எப்போதும் போல மிகவும் அசால்ட்டாக கையாண்டு கைத்தட்டல்களை வாங்கி குவித்து செல்கிறார் நம் எம்.எஸ்.பாஸ்கர். ரிது வர்மாவும் அவருக்கு ஈடு குடுக்கும் வகையில் நடித்து கொடுத்திருக்கிறார். இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவின் இசையில் பாம்பே ஜெயஶ்ரீ பாடியுள்ள கண்ணா தூது போடா பாடல், இக்கதையை இன்னும் அழகாகவும் கனமாகவும் மாற்றியுள்ளது என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. 

 Coffee Anyone

சுஹாசினி மணிரத்னம் இயக்கியுள்ள இந்த கதையானது கோமா ஸ்டேஜில் உள்ள அம்மாவின் பிறந்தநாளும் அதனோடு அவரின் மூன்று மகள்களின் உணர்வு போராட்டங்களும் தான் இக்கதை. அன்புடன் கலந்த அதிகாரமுமிக்க அப்பாவாக காத்தாடி ராமமூர்த்தி நம்மை கவர்ந்துள்ளார். அனு ஹாசன் குடுக்கும் சின்ன சின்ன எக்ஸ்ப்ரெஷன்களும்., நமக்கு ‘ரன்’-ல் பழக்கப்பட்ட மாதவனின் அக்காவை நியாபக படுத்தி செல்வதை  தவிர்க்கமுடியவில்லை. அனு ஹாசன் அவர்கள் கண்டிப்பாக மீண்டும் ஒரு ரீ-என்ட்ரி கொடுக்கலாம் என்கிற அளவுக்கு அனைவரையும் ஒரு ஏக்கத்தில் ஆழ்த்தியுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். சுஹாசினியும், ஷ்ருதி ஹாசனும் தேவைக்கேற்ப நடிப்பை பகிர்ந்து கொடுத்துள்ளனர். ஆங்காங்கே சில எமோஷனல் தருணங்களையும் ஏற்படுத்தி., சூடாக இல்லாமல்  இதமான ஒரு காபியாக பரிமாறப்பட்டுள்ளது இந்த கதை.

 ரீ – யூனியன்

ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஆண்ட்ரியா, குருச்சரண் மற்றும் லீலா சாம்சன் நடித்துள்ள இந்த கதை பக்கா சர்ப்ரைஸ் பேக்கேஜ் தான். மாடர்ன் இசைக்கலைஞராக ஆண்ட்ரியாவும், அவருக்கு அது கச்சிதமான கதாபாத்திரம்தான். அதே அன்புடன் கொஞ்சம்  அம்மாவாகவும் பேசும் லீலா சாம்சன், மருத்துவராக குருச்சரண். போதை பொருள் பழக்கத்திற்கு அடிமையாகி கிடக்கும் தன்னுடைய பள்ளித் தோழிக்கும், பள்ளி காலத்தோடு இசையை மறந்து போன இந்த காலகட்ட மருத்துவருக்குள்ளும் ஒற்றை வீட்டினுள் நடக்கும் எதிர்பாரா திருப்பங்களுடன் கூடிய கூத்துக்கள் இந்த கதையின் மீது பரவசத்தை ஏற்படுத்துகிறது. இசையுடன் ரகளையும் கலந்த ஒரு கலவையாக  கொடுத்து, இந்த சர்ப்ரைஸ் பேக்கேஜ் ல்  ராஜீவ் மேனன் நிச்சயம் நம்மை ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்.

 மிராக்கிள்

கடைசியாக நம் கார்த்திக் சுப்புராஜ், ஷார்ட் ஃபிலிம் மூலம் சினிமா என்ட்ரி கொடுத்தவர் இவர், தனது சொந்த ஆடுகளத்தில் சிக்சர் அடிக்காமல் விடுவாரா என்ன…? தனது ட்ரேட்மார்க்கான காமெடியையும், ஸ்டைலையும் கார்த்திக் தவறாது கொடுத்துள்ளார். பாபி சிம்ஹாவுக்கும் மற்றும் சரத் ரவிக்கும் இடையிலான கெமிஸ்ட்ரி பக்காவாக வொர்க் அவுட் ஆகி உள்ளது. மற்ற கதைகளில் விடுபட்டிருந்த  சாமானிய மனிதர்களின் லாக்டவுன் வாழ்க்கையினை ஓசி கட்டுச்சோரின் வாசத்தோடும் மற்றும் குருஜி டால்க்ஸ்-ன் நக்கலோடும், அவருக்கே உரித்தான க்ளைமாக்ஸ் திருப்பதோடும் கொடுத்திருப்பது மிராக்களை இன்னும் மிராக்களாகியுள்ளது.

பல ஷார்ட் பிலிம்களை தமிழ் சினிமா ரசிகர்கள் பார்த்திருப்பார்கள். அவ்வகையில், ஐந்து பிக பெரிய முன்னணி இயக்குநர்களின் ஷார்ட் பிலிம்களை கோர்த்து, உருவாகியுள்ள இந்த புத்தம் புதுக் காலை, மனதுக்கு மிகவும் இதமாக அமைந்துள்ளது. இன்னும் இதுபோன்ற பல முயற்சிகள் கண்டிப்பாக வர வேண்டும் என்ற எண்ணத்தினை ரசிகர்களிடம் விதைத்ததில், வெற்றியை வசமாக்கி கொண்டுள்ளனர் ஒவ்வொரு இயக்குநர்களும். அதற்கேற்ப தொழில்நுட்ப கலைஞ்சர்களும் சிறப்பாகவே  உழைத்திருக்கிறார்கள் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. 

 
Production: Amazon Prime 

 

Cast: Andrea | Bobby Simha | Jayaram | Kalidas Jayaram | Kalyani Priyadarshan | MS Bhaskar | Ritu Varma | Shruti Haasan | Suhasini Maniratnam | Urvashi 

 

Direction: Gautham Menon | Karthik Subbaraj | Rajiv Menon | Sudha Kongara | Suhasini Maniratnam 

 

Spread the love

Related posts