Raja Raja Chora – தெலுங்கர்கள் இராஜ இராஜ சோழனை இழிவுபடுத்தியுள்ளார்கள்?

Raja Raja Chora

Raja Raja Chora – உங்களுக்கு ஒரு சாளுக்கிய மாமன்னரை பற்றி முதலில் சொல்கிறேன்.

வடக்கில் நூறு போர்களை கண்ட ஹர்ஷ வர்த்தனரையே தோற்கடித்தவன்.
ஒட்ட தேசம் என்று அழைக்கப்பட்ட கலிங்க தேசத்தையும் வெற்றி கொண்டவன்.
இந்த பக்கம் ஆந்திர மன்னர்களையும் பந்தாடியவன்.
அப்படியே தமிழ் நாடு பக்கமும் வந்து சோழர்களை தோற்கடித்து, பல்லவ அரசன் மகேந்திர வர்மன் மீதும் கடும் போர் தொடுக்க, பல்லவ அரசர் தன் தலைநகரத்தை காப்பாறிக் கொண்டதாக வரலாறு.
அதன்பின், மகேந்திர வர்மனின் மகன் நரசிம்ம பல்லவன், தன் அப்பாவுக்கு ஏற்பட்ட களங்கத்தை துடைக்க, சாளுக்கிய தேசத்தின் தலைநகரமான வாதபிக்கே படை நடத்தி சென்று துவம்சம் செய்ததாக வரலாறு.
இன்றைக்கு கத்துக்குட்டி பாடகர் முதல் நாரத கான சபாவில் ப்ரைம் டைமில் தொடையை தட்டி பாடும் “வாதாபி கணபதிம் பஜே” என்ற அதே வாதாபி ஊர் தான்.

இன்று கர்நாடகாவில் பதாமி என்று அழைக்கப்படுகிறது.

இந்த நரசிம்ம பல்லவன் தான் மல்லனுக்கெல்லாம் மல்லன் – மாமல்லன் என்று பட்டம் பெற்றவன்.
இந்த மகேந்திர வர்மன் தான் மகாபலிபுரத்தில் கல்லிலே கலை வண்ணம் கண்டவர்.
மகாபலிபுரத்து கற்றளி கோவில்கள் தான் தஞ்சை பெரிய கோவிலுக்கு தூண்டுகோல் என்றும் ஒரு செய்தி.
சரி, நாம் சாளுக்கிய மன்னர் கதைக்கு வருவோம்.

இப்படி ஒரு தேசம் விடாமல், தன் பராக்கிரமத்தை காட்டிய அந்த சாளுக்கிய மன்னனின் பெயர் புலிகேசி.

நாம் 23ம் புலிகேசி என்று படம் எடுத்து, இன்றும் மீம்ஸ் ரிலீஸ் செய்து கொண்டிருக்கிறோம்.
23ம் புலிகேசி வந்த போது, கர்நாடகத்தில் வாட்டாள் நாகராஜ் தலைமையில் தியேட்டர் தோறும் ஆர்ப்பாட்டம் நடந்தது. படத்தை ரிலீஸ் செய்ய விடவில்லை.

வா.நாகராஜ் அந்த ஊரு லோக்கல் கரகாட்ட கோஷ்டி.

ஆனால் பெங்களூரில் எல்லா இடத்திலும் அந்த படத்து டிவிடி கிடைத்தது. மக்களுக்கும் கார் பார்க்கிங் மற்றும் பாப்கார்ன் செலவு மிச்சமானது.

இன்னொரு சம்பவத்தையும் சொல்கிறேன்:

ரட்சகன் படம் வெளியான போது, அதில் வரும்

“சோனியா! சோனியா! சொக்க வைக்கும் சோனியா

காதலில் நீ எந்த வகை கூறு? ”

என்ற பாடலை எதிர்த்து சத்திய மூர்த்தி பவன் வாசலில் ஒரு காங்கிரஸ் கோஷ்டியும், வள்ளுவர் கோட்டம் வாசலில் இன்னொரு கோஷ்டியும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மூன்றாவது கோஷ்டி “சத்தியமூர்த்தி பவனில் போராட்டம்” என்பதை அரைகுறையாக காதில் வாங்கிக் கொண்டு, சரவண பவன் வாசலில் போய் நின்றதாக ஒரு செய்தி.

இங்கு சோனியாவை அசிங்கப்படுத்தியது யார்?

நியாயப்படி அந்தம்மா பெயர் சோனியாவே இல்லை.

ஒரு ஜுஜுபி படத்தின் பெயரா(Raja Raja Chora), ராஜ ராஜ சோழனின் புகழை களங்கப் படுத்த போகிறது?
சந்திர சூரியன் உள்ளவரை தஞ்சை பெரிய கோவில் நிமிர்ந்து நிற்கும்.
அதை கட்டி எழுப்பிய ராஜ ராஜனின் புகழும் ஒரு குன்றுமணி கூட குறைய போவதில்லை.
அருண்மொழி வர்மனுக்கு அளிக்கப்பட்ட பட்டம் தான் ராஜ ராஜ சோழன்.
சில நேரங்களில், சிலரை கண்டுகொள்ளாமல் நம் பாதையில் செல்வதே உரிய பதிலாக அமையும்.

தை திங்கள் முதல் நாள் தான் பொங்கலோ பொங்கல்னு பொங்கணும்.

Related posts