சைலன்ஸ் – SILENCE
அமெரிக்காவில் இருக்குற ஒரு பங்களாவில் மிகவும் மர்மமான முறையில் இரண்டு பேர் இறந்து போறாங்க. அந்த வீட்டில் உள்ள ஒரு ஓவியத்தினை தேடி நடிகர் மாதவனும் அவரது காதலியான நடிகை அனுஷ்காவும் செல்கின்றார்கள். அங்கு சென்ற மாதவன் மிகவும் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். காயங்களுடன் தப்பித்துக் கொண்ட அனுஷ்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.
இந்த கொலையை பற்றி துப்பறிய நடிகை அஞ்சலி மற்றும் மைக்கல் மேட்சன் என்ட்ரி கூடுகிறார்கள். மேலும் இதற்கிடையில் பல இளம் பெண்கள் அடுத்தடுத்து காணாமல் போகின்றனர். இந்த காணாமல் போன பெண்களுக்கும் கொலை செய்யப்பட்ட மாதவன் கொலைக்கும் எதோ தொடர்பு இருப்பதாக விசாரணை தொடங்குகிறார்கள். இறுதியில் நடிகர் மாதவன் எப்படி கொலை செய்யப்பட்டார்? மேலும் காணாமல் போன பெண்களின் நிலை என்ன? இதன் பின்னணி தான் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதையாக இருந்தது.
இசைக்கலைஞராக நடித்திருக்கும் நடிகர் மாதவன் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். வித்தியாசமான பாத்திரம் என்று திறமையாக செய்துள்ளார். இவரை தொடர்ந்து காது கேட்காமல், வாய் பேச முடியாமல் இருக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் நடிகை அனுஷ்கா. ஓவியராக வரும் அனுஷ்கா படத்தின் வெகுவான காட்சிகளில் வந்துள்ளார். ஆனால், நடிப்பு திறனை வெளிப்படுத்தும் அளவிற்கு காட்சிகள் ஏதும் அமையாதது
தான் வருத்தம். மாதவனும் மற்றும் அனுஷ்காவும் வரும் காட்சிகளை ரசிக்கலாம்.
போலீஸ் அதிகாரியாக வருகின்ற அஞ்சலி, கதாபாத்திரத்திற்கு பொருந்தினாலும், நடிப்பில் ஜொலிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். குறிப்பாக அஞ்சலி பேசும் ஆங்கிலம் கொஞ்சம் கூட செட்டாகவில்லை. மற்றொரு போலீஸ் அதிகாரியாக வரும் மைக்கல் மேட்சன் மற்றும் சுப்பராஜு ஆகியோர் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள் என்று தான் கூற வேண்டும் . மற்றொரு கதாநாயகியாக வருகின்ற ஷாலினியின் நடிப்பை பார்த்தால் கொஞ்சம் செயற்கை தனமாக தான் இருக்கிறது.
திகிலுடன் கலந்த திரில்லர் படத்தை இயக்கி உள்ளார் இயக்குனர் ஹேமந்த் மதுக்கூர். படத்தில் ஆரம்பத்தில் இருந்த விறுவிறுப்பு போகபோக குறைந்து விடுகிறது. அமெரிக்காவை சுற்றியே படம் முழுதும் காட்சியாக்கி இருக்கிறார். ஹாலிவுட் தரத்திற்கு உருவாக்க நினைத்த இயக்குனர் திரைக்கதையில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தி இருந்திருக்கலாம். பல படங்களில் பார்த்து சலித்த அதே திருப்பங்கள் சோர்வை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்து வரும் காட்சிகளை மிகவும் சுலபமாக யூகிக்க முடியும் அளவிற்கு வைத்திருக்கிறார் இயக்குனர். கதாபாத்திரங்களிடம் இன்னும் கொஞ்சம் வேலை வாங்கி இருந்தால் இந்த சைலன்ஸ் திரைபடம் மேலும் கொஞ்சம் சத்தமாக இருந்திருக்கும்.
கோபி சுந்தர் இசையமைத்த பாடல்கள் அதிக கவனம் பெறவில்லை. ஷெனியல் டியோ ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம் என்று சொல்லலாம் . அமெரிக்கா என்பதால் பிரம்மாண்டம் என்று ஏதும் இல்லாமல் கதைக்கு எது தேவையோ அதை அழகாக கச்சிதமாக படம் பிடித்து கொடுத்துள்ளார்.
மொத்தத்தில் ‘சைலன்ஸ்’ இன்னும் கொஞ்சம் சத்தம் தேவை.
Trending Now Team Review
Production: Kona Film Corporation
Cast: Anjali | Anushka Shetty | Madhavan | Shalini Pandey
Direction: Hemant Madhukar
Screenplay: Hemant Madhukar
Music: Gopi Sundar
Editing: Prawin Pudi
Spread the love