சூரரைப் போற்று
டெக்கான் ஏர் விமான சேவை நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை கதையான Simply Fly என்ற புத்தகத்தினை தழுவி இத்திரைப்படம் உருவாகியுள்ளது. மிக குறைந்த கட்டணமான, ஒரு ரூபாயில் சாமானிய மக்களை விமானத்தில் பறக்க செய்ய, ஜி. ஆர். கோபிநாத் அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளையும் போராட்டங்களையும் அவர் சந்தித்த சவால்களையும் மையப்படுத்தி இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
நெடுமாறன் ராஜாங்கம் கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா கனகச்சிதமாக இந்த கதாபாத்திரத்துக்கு பொருந்தி தனது திறமையான நடிப்பினை வெளிப்படுத்தியுள்ளார். 1977 ம் ஆண்டு முதல் 2003 ம் ஆண்டு வரை வெவ்வேறு காலக்கட்டங்களில் பயணிக்கும் மாறா கதாபாத்திரத்திற்காக, நடிப்பில் மட்டுமல்ல தனது உடல் வடிவிலும் மிகவும் நேர்த்தி காட்டி ஆச்சர்யப்பட வைக்கிறார் சூர்யா. மாறாவாக பெருங்கனவை சுமந்து துடிப்பதை போலவே., சூரரைப் போற்று படத்தினை தனது தோளிகளில் ஏந்தி தாங்கி பிடித்து கொண்டு செல்கிறார் சூர்யா.
ஒவ்வொரு படத்திற்கும் ஏற்றாற்போல் தனது தனிச் சிறப்பான நடிப்பை கொடுத்து வரும் சூர்யாவின் கிரீடத்தில், சூரரைப் போற்று மற்றுமொரு வைரக்கல்லை பதித்திருக்கிறது என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. அழுகை, கோபம், ஆத்திரம், காதல் என்று பலவிதமான உணர்வுகளை திரையில் மிகவும் வலிமையாக வடித்து ரசிகர்களை கலங்க வைத்துவிடுகிறார். அபர்னா பாலமுரளி, பொம்மி கதாபாத்திரத்திற்கு ஒரு சிறந்த தேர்வு. இயக்குனர் சுதா கொங்கராவின் கதாநாயகிகளுக்கே உரித்தான அடாவடியும் நக்கல் பேச்சும் கொண்டு ரசிக்க வைக்கிறார் அபர்னா பாலமுரளி. சூர்யாவுடனான காதல் காட்சிகள் மட்டுமின்றி, எமோஷனல் காட்சிகளிலும் பிரமிக்க வைக்கிறார் அபர்னா.
கதாநாயகனின் பக்கபலமாக நண்பனாக வரும் காளி வெங்கட், விவேக் பிரசன்னா, கருணாஸ் உள்ளிட்டோர் சிறப்பான பங்களிப்பை கொடுத்து செல்கின்றனர். ஊர்வசியும் பூ ராமுவும் சில காட்சிகளிலேயே வந்தாலும், மனதை கரைக்கும் பர்ஃபார்மன்ஸ் வெளிகாட்ட தவறவில்லை. மோகன் பாபுவின் கெத்தான உடல் மொழியும் தெலுங்கு கலந்த உறுதியான வசன உச்சரிப்பும் கச்சிதம் என்று தான் கூற வேண்டும். பல மொழிகளில் படம் வெளியாவதால், சில வேற்று மொழி நடிகர்களின் முகங்களை படத்தின் பெரும்பகுதியை காண முடிகிறது. அதுமட்டும் நம்மை லேசாக அந்நியப்படுத்துவதாக தெரிகிறது.
இத்திரைப்படத்தில் பெரிதும் பாராட்டப்பட வேண்டிய மற்றுமொரு ஆள்தான் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ். ஏற்கனவே படம் ரிலீஸ் முன்னதாகவே பாடல்கள் யாவும் சூப்பர் ஹிட் கொடுத்து, சூரரைப் போற்று படத்திற்கு பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியதில் ஜி.வி.யின் பெரும் பங்குண்டு. மேலும் படத்தின் பின்னணி இசையிலும் மனுஷன் அசுரத்தனமாக உழைத்திருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது. பரபரப்பான காட்சிகள் தொடங்கி, காதல் வழிந்தோடும் குறும்புகள் வரை தனது இசையினால் மேலும் மெருகேற்றிவிடுகிறார் நம் ஜி.வி.பிரகாஷ்
ஒரு சாதாரண மனிதன் மற்றும் அவரது அசாதாரணமான கனவு எப்படி சாத்தியமானது என்பதை முதலில் திரைப்படமாக எடுத்த முயற்சிக்கே படக்குழுவினரை நிச்சயம் பாராட்ட வேண்டும். குறிப்பாக எளிய மனிதர்களுக்காக விமான சேவையை கொடுப்பதில் ஏற்பட்ட தடைகளையும் போராட்டங்களையும் சவால்களையும், அதை தாண்டி வெற்றிக்கண்ட உறுதியையும் ஆழமாக பதிவு செய்ததில் இயக்குனர் சுதா கொங்கராவும் அதை திரையில் கொண்டு வந்த சூர்யாவும் டெக்கான் ஏர் விமானமாக உயர்ந்து பறக்கிறார்கள் என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.